வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர்!

You are currently viewing வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு முழுமையான ரோம்-காம் டிராமாவாக இப்படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது.

குறிப்பாக, திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் டிரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் என டிரெய்லர் முழுக்க சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்துள்ளன.

மேலும், மறைந்த இயக்குநர் நடிகர்  கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அனுபவம் மிக்க திரை ஆளுமைகளின் அட்டகாசமான நடிப்பும் டிரெய்லரில் கவனம் பெறுகிறது. அதேபோல், கவின் – நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

புதிய வெளியீட்டு அறிவிப்பின்படி, ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this:

Leave a Reply