பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்

You are currently viewing பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார்.

‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே ‘எல்லோரும் சமம்’ என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் ‘Always Choose Kindness’ என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர். சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகை அனுமோல், இத்தகைய செயல்பாடுகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

நடிகை அனுமோலை அவரது ரசிகர்கள் அண்மையில் சந்தித்தனர். அப்போது, பெண்களின் பேராற்றலைக் கொண்டாடும் நவராத்திரி திருவிழாவில், குடும்பத்தின் மேன்மைக்காகவும், சொந்தக் காலில் நின்று பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான சுய அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட பெண்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என கலந்துரையாடினர். இதற்கு நடிகை அனுமோல் உடனடியாகச் சம்மதம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ செல்வ லட்சுமி திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தேர்வு செய்யப்பட்ட அனைத்து பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர். நடிகை அனுமோல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்களுடன் உரையாடினார்.

நடிகை அனுமோல் பேசுகையில், “இங்கு வருகை தந்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் வணக்கமும் நன்றியும். குடும்பத்திற்காக இரவு, பகல் பாராமல், எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என்ற சூழலில் ,ஆட்டோ ஓட்டுவது என்பது எளிதானதல்ல. உங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், உங்கள் மீது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும், சொந்தக் காலில் நின்று சுயமரியாதையுடனும் சுய அடையாளத்துடனும் திகழ்வதற்காகவும் நீங்கள் உழைப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

என்னைப் பொறுத்தவரை, எல்லோரும் சமம் என்றே கருதுகிறேன். பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருப்பதுடன், ஆரோக்கியத்தையும் கல்வியையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டும். பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, எந்தவிதப் பாகுபாடுமின்றி மனிதநேயத்துடன் வாழ்வதும் மிகவும் அவசியம். அதனால், உங்களை யாரேனும் உருவத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ சிறுமைப்படுத்தினால், அதனைப் பொறுமையுடன் புறந்தள்ளி, உங்கள் லட்சியத்தில் மன உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்தப் பிரத்யேக நாளில் உங்களுடன் கலந்துரையாடுவதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, நடிகை அனுமோல் ஒவ்வொரு பெண் ஆட்டோ ஓட்டுநரையும் சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்களுடைய குடும்பச் சூழல் குறித்தும் விரிவாக உரையாடினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் பவானி பேசுகையில், “இதற்கு முன்பு எனக்கும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் உதவி செய்துள்ளன. ஆனால், எங்களின் தேவைகளை அறிந்து, இன்சுலேட்டட் வாட்டர் பாட்டில்(Insulated water bottles), தரமான நாப்கின், பவர் பேங்க், முதலுதவிப் பெட்டி ஆகியவற்றை வழங்கியதுடன், சுவையான உணவையும் அளித்து எங்களைக் கௌரவப்படுத்தியதை வாழ்க்கையில் மறக்க இயலாது. ஐ லவ் யூ மேடம்!” என மனம் நெகிழ கூறினார்.

Share this:

Leave a Reply