‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா !

You are currently viewing ‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா !

*பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்:  ‘ரெட் லேபில்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!* 

 *வாழ்வியல் படங்களை எடுங்கள்: ‘ரெட் லேபில்’ பட விழாவில் ஆர்.வி. உதயகுமார் பேச்சு!* 

 *படத்திற்கு தலைப்பு வைத்ததே கதாநாயகி தான் : ‘ரெட் லேபில்’ படத்தயாரிப்பாளர் வெளிப்படையான பேச்சு!* 

இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்.

 இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.

சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

 நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த ‘ரெட் லேபில்’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

 *இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்கள் எழில், வசந்தபாலன், மித்ரன் ஜவஹர், நடன இயக்குனர் ஸ்ரீதர், அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.* 

*விழாவில்  கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசும்போது,* 

“தயாரிப்பாளர் முதலில் என்னிடம் கதை கேட்டார். நான் இரண்டு கதைகளைச் சுருக்கமாகச் சொன்னேன். அதில் ஒன்றை தேர்வு செய்தார். ஹாலிவுட் திரையுலகத்தில் முதலில் கதையைத் தேர்ந்தெடுத்து பிறகு தான் மற்றவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த பாணியில் இந்த தயாரிப்பாளர் முதலில் கதாசிரியரை அணுகி என்னிடம் கதை கேட்டார். பிறகு தான் இயக்குநரைத் தேர்ந்தெடுத்தார் .அந்த வகையில்  இந்தப்படம் முறையாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எடுத்து முடித்த பிறகு அதில் நடித்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அவர்கள் காட்சிகளைப் பார்த்துவிட்டுச் சில மாற்றங்களை யோசனையாகக் கூறினார். அதன்படி  ஒரு காட்சி கூட புதிதாக எடுக்காமல் அந்த மாற்றங்களைச் செய்தோம். பெரிய ஆச்சரியமாக இருந்தது ,அது ஒரு வேறு ஒரு விதத்தில் இருந்தது. அந்த வகையில் அவரது அனுபவம் தந்த உதவி மறக்க முடியாதது “என்றார்.

 *நடன இயக்குநர் விஜி சதீஷ் பேசும்போது,* 

” இந்தப் படத்தின் கதாநாயகன் தயாரிப்பாளர் லெனின் கட்டிப் பிடித்து நடிக்க மாட்டேன் என்றார். நான்தான் அப்படி நடிக்க வைத்தேன்.அவரது மனைவி தவறாக நினைக்கக் கூடாது” என்றார்.

 *நடிகர் கார்மேகம் சசி பேசும்போது,* 

”  வளர்ந்து வரும் இந்தக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

 *நடிகை அனுஷா பேசும் போது,* 

” நான் இரண்டும் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இதுதான் எனது முதல் மேடை. படத்தை ஊடகங்கள் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவுங்கள் “என்று கேட்டுக் கொண்டார்.

*நடிகர் கெவின் பேசும்போது,* 

குரல் தழுதழுத்தது .

“என்னை வைத்து இயக்குநர் முதலில் ‘குப்பை’ என்ற குறும்படம் எடுத்தார். அது  திரைப்பட விழாக்களில் 50 விருதுகளைப் பெற்றது. எனக்கு 6 விருதுகள் கிடைத்தன. அந்த இயக்குநரின் தந்தை இன்று இல்லாதது வருத்தம்” என்று கண் கலங்கினார்.

*இயக்குநர் அனுமோகன் பேசும்போது,* 

” நாங்கள் யாரும் சிரமப்பட்டு படம் எடுக்கவில்லை. நாங்கள் ஜாலியாகவே படப்பிடிப்பில் இருந்தோம்” என்றார்.

*கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசும்போது,* 

“டியர், டீசல்  படங்களுக்குப் பிறகு இது எனக்கு மூன்றாவது படம். படப்பிடிப்பில் நான் கேட்டதைக் கொடுத்தார்கள். தேவையானதைச் செய்தார்கள் “என்றார்.

*உடை அலங்கார நிபுணர் திரிபுரசுந்தரி பேசும்போது,* 

” இந்த படத்தில் அனைவரும் நண்பர்கள் போல் இருந்தார்கள்.சம்பளம் தாமதமின்றிக் கிடைத்தது. மிகவும் சரியாக இந்தப் படக் குழு இருந்தது” என்றார்.

*இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன் பேசும்போது,* 

” நான் மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன். தமிழில் இது எனக்கு முதல் படம். இது நல்லதொரு படக் குழு .இயக்குநர்  எது வேண்டும் எது வேண்டாம் என்பதில்  தெளிவாக இருந்தார். தயாரிப்பாளரும் இயக்குநரும் சினிமா மீது பெரிய மோகம் கொண்டவர்கள் .எனக்கு மிகவும் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தார்கள்” என்றார்.

 *நடன இயக்குநர் ஸ்ரீதர் பேசும் போது,* 

”  இந்தப் படத்தின் கதாநாயகன் கெத்தாக மாசாக இருக்கிறார்.

 படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில்  நானும் என் மகளும் இணைந்து ரீல்ஸ் எடுத்துக் கொடுத்திருக்கிறோம். படத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் அவை இருக்கும் என்று நம்புகிறோம் .படத்தில் உள்ள இரண்டு பாடல்களும் பெரிய வெற்றி பெறும். ” என்றார்.

*இயக்குநர் மித்ரன் ஜவஹர் பேசும்போது ,* 

“ஆர்.வி. உதயகுமார் 90களில் பிஸியான இயக்குநர். இப்போது நடிகராக பிஸியாக இருக்கிறார்.

வாழ்த்துக்கள் .இந்தப் படக் குழுவினர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

 *இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,* 

” இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது புதிதாக இருக்கிறது. கதையை நம்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் கதையை நம்பி வருவது வரவேற்கத்தக்கது.  நம்பிக்கைக்குரிய இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்”என்றார்.

*இயக்குநர் பேரரசு பேசும்போது,* 

” இந்தக் கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத்  தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி ,ரஜினி – ஸ்ரீபிரியா போல இந்த லெனின் – அஸ்வின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும். 

ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே. பாலச்சந்தர், டி ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது. தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால்  நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்.

இந்தப் படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி  ஒரு படத்தில்  பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார் ,வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள்  என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். இந்தச் சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல.ஒவ்வொரு இயக்குநருக்கும்  அவமானம். அதற்காக சின்மயிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள் .ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள் .எஸ் . ஜானகி, பி. சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள்.அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?

குறிப்பாக  இயக்குநரை தயாரிப்பாளரை அவமானப்படுத்த உரிமை யாருக்கும் கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது தொந்தரவு தருவது தவறானதாகும்” என்றார்.

 *இயக்குநர் எழில் பேசும்போது,* 

“இவர்களுக்கு இது முதல் படம் போலத் தெரியவில்லை. நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இயக்குநருக்குச் சுதந்திரம் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். தயாரிப்பாளர் நடிக்க வந்துவிட்டால் சில கிறுக்குத்தனங்கள் வந்துவிடும். ஆனால் இந்த தயாரிப்பாளர் லெனின் அப்படி எல்லாம் செய்யாமல் இதை முறையாக உருவாக்கி இருக்கிறார். இயக்குநரிடம் சௌகரியமாக நடந்து கொண்டிருக்கிறார். எனவே படம் நன்றாக வந்துள்ளது. வாழ்த்துகிறேன்” என்றார்.

 *படத்தின் இயக்குநர் கே. ஆர். வினோத்* 

பேசுவதற்கு முன் தனது 12 உதவி இயக்குநர்களையும் மேடையில் ஏற்றி  அறிமுகப்படுத்தி சபையினரின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொடுத்தார். இது ஒரு புதிய தொடக்கமாக இருந்தது.

இயக்குநர் தொடர்ந்து பேசும்போது,

“நாங்கள்  வளர்ந்து வரும் படக் குழுவினர். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனவே தான் பலரும் நேரம் காலம் பார்க்காமல் அனைவரும் உழைத்தனர். இது ஒரு தனி மனித முயற்சியல்ல. அனைவரும் சேர்ந்து உழைத்ததால் தான் படம் நன்றாக வந்துள்ளது. உதயகுமார் சார் ஒரு வழிகாட்டி போல் இருந்து தயாரிப்பாளர் இயக்குநரை நம்பி அனைத்தையும் செய்தார். அவரிடம் நான் ஒரு உதவி இயக்குநரைப் போல கற்றுக் கொண்டேன்.கதாநாயகன் படப்பிடிப்பில்  முதல் இரண்டு நாள் சுமாராக நடித்தார். மூன்றாவது நாளிலிருந்து முழு நடிகராக அவர் நடிக்கத் தொடங்கிவிட்டார்.அப்படி நடித்து இப்போது அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்து விட்டார். படம் நன்றாக வந்துள்ளது. இது நாகரிகமான படம். நிச்சயமாக அனைவரையும் திருப்திப் படுத்தும் “என்றார்.

*இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசும்போது,* 

” முதலில் இந்தத் தலைப்பை நான் பாராட்டுகிறேன். நல்ல அழகான தலைப்பு. தயாரிப்பாளர் லெனினை முதலில் பாராட்டுகிறேன். நான் கோயம்புத்தூர் காரனாக இருந்தாலும் எந்த கோயம்புத்தூர்க்காரரும் எனக்கு  வாய்ப்பு கொடுத்ததில்லை. இவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.என்னிடம் வந்ததுமே முதலில் படம் தயாரிக்கிறாயா? யோசனை செய் ,எச்சரிக்கையாக இரு என்றுதான் நான் சொன்னேன். முதலில் அவர் நடித்த ‘உன் கூடவே’ என்கிற பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு கொடுத்த உந்துதலில் தயாரிப்பாளராக வந்து விட்டார்.  கதாநாயகன் ஆகிவிட்டார். ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே இந்த படப்பிடிப்பு இனிமையாக இருந்தது.

ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்த விட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து  பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது. இப்போது அப்படி இல்லை.அனைவரும் பார்க்கும் படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள் .மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள் .அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து  படமாக எடுக்க வேண்டும். அப்படி இன்று படங்கள் வருவதில்லை. புதியவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்” என்றார்.

 *கதாநாயகி அஸ்மின் பேசும்போது,* 

” நான் கேரளாவில் இருந்து வந்து இருக்கிறேன். அங்கே எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது என் முதல் மேடையாக உணர்கிறேன். பதற்றமாக இருக்கிறது. கதாநாயகியாக எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் நல்ல நண்பராகவும் என்னை ஊக்கப்படுத்துபவராகவும் இருந்தார் .அனைவருக்கும் நன்றி “என்றார்.

 *கதாநாயகனும் தயாரிப்பாளருமான லெனின் பேசும் போது,* 

“பொன் பார்த்திபன் என்னிடம் கூறிய இரண்டு கதைகளில் என் பட்ஜெட்டுக்கேற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் நாலைந்து கதாநாயகிகள் நடித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். இந்த கதாநாயகியின் படம் வந்து கொண்டே இருந்தது .இவரை நாங்கள் நிராகரித்து விட்டோம் .மீண்டும் மீண்டும் அவரது  போட்டோவைக் காட்டினார்கள்.  முகத்தை கழுவி விட்டு செல்ஃபி எடுத்து ஒரு போட்டோ அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம். அவரும் அப்படியே அனுப்பி இருந்தார் .அவர் தேர்வாகி விட்டார்.

உண்மையைச் சொன்னால் இந்த படத்தின் தலைப்பே அவர் சொன்னதுதான். இதற்கு முன்பு நாங்கள் ஒரு சாதாரண தலைப்பையே வைத்திருந்தோம்.

இயக்குநருக்கும் எனக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மிகவும் பொறுமைசாலியாக இருந்து அனைத்தையும் சமாளித்தார். எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று பொறுமை காட்டினார் .அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .சொன்னது போல் படத்தை எடுத்து முடித்து விட்டார் .

எனக்கு எல்லாமே நேரத்திற்கு நடக்க வேண்டும். நானும் எனது தரப்பில் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுத்து விடுவேன். யாருக்கும் பாக்கி வைப்பதில்லை.பணம் இருந்தால் படப்பிடிப்பு நடத்துவோம்.பணம் இல்லாவிட்டால் படப்பிடிப்பை ரத்து செய்து விடுவோம்.யாருக்கும் பாக்கி வைக்க மாட்டோம்.

ஆர்.வி.உதயகுமார் சார் பற்றி இங்கே சொல்ல வேண்டும். அவர் இந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவாவதற்கு முன்பாகவே அவர் எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில்  நடிக்க வருவதற்கு முன்பே எனக்காக அவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் பெப்சியிலும் பேசி பல சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். அந்த உதவியை மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயமாக பார்க்கும் படியாக இருக்கும். திருப்தி தரும் படமாக இருக்கும் என்பதற்கு நான் 100% உத்திரவாதம் தருகிறேன்” என்றார்.

இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 *விழாவை பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன்  தொகுத்து வழங்கினார்.*

Share this:

Leave a Reply